அணையாத தீபங்கள்

கடற்கரும்புலி மேஜர் அன்பு

‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது.
வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்……
இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள்.
நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலையில் விழுந்தது. பொறுப்பாளர் அன்புவை அழைத்தார். ‘அன்பு…. நீதான் அவர்கள எப்படியாவது அமைதிப்படுத்த வேணும்…..” அன்பு முதலில் தயங்கினாலும், நிலைமையைப் புரிந்தவனாய் தன் அம்மாவோடும், உறவுகளோடும் போய்க் கதைத்தான்.
அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுதா….. காலில விழுந்து கும்பிட்டா….. ‘தம்பி கரும்புலியாப் போகாதையடா….” உடன்பிறப்புக்களோ அவன் கையையும் காலையும் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அன்புவிடம்.
திருவள்ளுவர் சொன்ன கூற்று அவன் மனத்திரையில்…
‘பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
அவன் முடிவெடுத்தான். ‘நான் கரும்புலியாப் போகேல்லையெண….” அம்மா கேட்டபடி ஊர்க்கோயில்கள் எல்லாவற்றின் மீதும் ‘சத்தியம்” செய்தான். பொய்யே பேசாத அவன் பொய்ச் சத்தியம் செய்யுமளவிற்கு சூழ்நிலைக் கைதியானான். அம்மா நம்பிக்கொண்டு வீட்டுக்குப்போக முற்றுகையிட்ட உறவுகள் பின்னாலே…
ஒருவாறாக அன்பு என்ற பெருமழை ஓய்ந்து போக அன்பு சிரித்தபடி போராளிகளிடம் வந்தான். போராளிகளின் விழிகள் கசிந்திருந்தன.
உலகில் எந்தவொரு உயிரினமும் ஆழமாய் அன்பு செலுத்துவது ‘அம்மா” என்ற தாய்மையில்தான் எவ்வளவுதான் மனவுறுதி படைத்தவனாக இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் அவனை ஆட்டங்காணச் செய்துவிடும். ஆனால், அன்புவோ… தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கொள்கையில் இருந்து சற்றும் தளரவில்லை.
தனது தாய், உறவுகள் என்ற குறுகிய வட்டத்திற்காக நமது தாய் மண்மீது அவன் வைத்த பற்றுதலைத் துறக்கத் துணியவில்லை. 20.09.1995, இன்பருட்டி வான் கலகலக்கத் தொடங்கியது.
அன்புவை வேவு பார்த்துக் கொண்டிருந்த தம்பி தகவல் சொல்ல அம்மாவிடம் ஓடினான். ‘அம்மா… நேற்றைக்கு நிண்ட படகிலதான் அண்ணா நிக்கிறானெண….” அம்மாவுக்குள் எரிமலை…. இன்பருட்டி வானை நோக்கி அம்மா ஓடினாள்.
இன்பருட்டிக் கரையில் அம்மாவின் தலைக்கறுப்பைக் கண்ட அன்பு படகிற்குள் மறைவாக இருந்தபடி எல்லோரையும் பார்த்தான்.
தலையிலும் வயிற்றிலும் அடித்தடித்து அம்மா மண்ணில் புரண்டு அழுதாள். உடன்பிறப்புக்களும் ஏதேதோ சொல்லி அழுதார்கள். படகின் பொறி ஓசையை மீறி அவர்கள் சொல்லி அழுவது மட்டும் புரியவில்லை.
ஆனால், அவர்கள் துடித்து அழுவது மட்டும் அன்புவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
தாயின் மீதும், உடன்பிறப்புக்கள் மீதும் அன்பு வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாய் அன்புவின் கண்களிலும் நீர்த்திரை. எத்தனையோ மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அவன் பயணம்… அன்பு உறவுகளின் கண்ணீரைக் கண்டு தடைப்பட்டுப் போகவில்லை. அவன் பயணம் கண்ணீரைக் கடந்துசென்று வென்றது.

தமிழ் பறை பாருங்கள்

சிறப்பு உரைகள்